அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்புக்கு செல்லும் இளைஞர்கள் வேறு. இதனால் தமிழக வெற்றி கழகத்திற்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்ததாதற்கு தமிழக ஆளுநர் வருத்தம் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவாக கூறி இருக்கிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் வேறு. எங்களுடன் இருக்கும் இளைஞர்கள் மக்கள் சக்தியாக உள்ளனர். தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். பெண்கள், கல்லூரி மாணவர்கள் என்றார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. கரூர் துயர சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கியுள்ளதை கேள்வி கேட்கும் ஊடகங்கள் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்த போது ஏன் கேள்வி கேட்கவில்லை.
திமுக 96 இடங்களில் வெற்றி பெற்ற போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் மந்திரி சபையில் இடம் பெறவில்லை. நாங்கள் கூட்டணி கட்சியினருக்கு மந்திரி சபையில் இடம் வழங்கியிருக்கிறோம். இந்த பெருமை தமிழக வெற்றிக் கழகத்தையே சாரும்.
திமுக அதிமுக கூட்டணி சேர்ந்தால் என்ன தப்பு என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ள நிலையில் திமுக அதிமுக இரண்டும் வட துருவம் தென் துருவமாக இருந்தது டிடிவி தினகரனுக்கு தெரியாதா. அதிமுகவின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
