புதுச்சேரியில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி அரசியல் நிலவரம், மேகதாது அணை விவகாரம், ஆளுநரின் ஆய்வு, தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 60 நாட்கள் கடந்தும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் முழுமையாக ஒதுக்கப்படாதது உண்மைதான் எனக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், இதுகுறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதாகவும், இறுதி முடிவை முதலமைச்சரே எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாக விமர்சித்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்றும், “தூய சக்தி”, “சிங்கப்பெண்” போன்ற பெயர்களும் முழக்கங்களும் மட்டுமே உள்ளன; ஆனால் பெண்கள் பாதுகாப்பாக உணரும் சூழல் உருவாகவில்லை என்றும் கூறினார். காவல்துறையினரின் சீருடையில் மாற்றம் செய்வது மட்டுமே போதாது, பெண்களின் பாதுகாப்பில் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகளில் நிலவும் குழப்பங்களை பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், குறுகிய காலத்திலேயே சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். “குதிரைப் பேர அரசியலில் தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாக செயல்படுகிறது”என்று விமர்சித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் நீர்வழங்கல் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பது கர்நாடக பாஜகவின் நிலைப்பாடாக இருந்தாலும் அதனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாஜக கடுமையாக எதிர்க்கும் என்றும் கூறினார்.

கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அந்த அதிருப்தியை திசைதிருப்பும் முயற்சியாகவே மேகதாது விவகாரம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆளுநர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு சட்டப்படி இருப்பதாக கூறினார். அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் உரிமையும் ஆளுநருக்கு உள்ளது என்றார். பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்கள் தொடர்ந்து மாவட்ட வாரியாக ஆய்வுகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட வானதி சீனிவாசன், தற்போது துணைக் குடியரசுத் தலைவராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தியதை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

அரசுத் திட்டங்களுக்கு தொடர்ந்து புதிய பெயர்கள் சூட்டப்படுவது, கல்வெட்டுகள் அகற்றப்படுவது மற்றும் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது கடந்த ஆட்சியிலும் நடந்தது, தற்போதும் தொடர்கிறது என்று அவர் விமர்சித்தார். “மாற்றம்” என கூறப்பட்டாலும் நடைமுறையில் எந்த அடிப்படையான மாற்றமும் நிகழவில்லை என்றார்.

பாஜகவில் இருந்து சிலர் விலகிச் செல்வது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அண்ணாமலை முன்பு கட்சியில் இருந்தார், தற்போது இல்லை என்றாலும், பாஜகவைப் பொறுத்தவரை பலர் கட்சியில் சேர்வதும் விலகுவதும் இயல்பான அரசியல் நிகழ்வுகள் என்றும், இதனால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து கருத்து தெரிவித்த அவர், திரைப்படங்களில் வருவது போன்ற வசனங்களை மட்டுமே பேசுகிறார்; ஆனால் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்று விமர்சித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக பணம் பெற்றுக்கொண்டு வழக்கறிஞர் நியமனங்களில் தலையிடுவதாகவும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் கையூட்டு பெறப்படுவதாகவும், வழக்கறிஞர் என்ற முறையில் தான் இதனை கூறுவதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

பேட்டியின் போது பாஜக மாநில தலைவர் வி பி ராமலிங்கம் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version