தவெக தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் விசிக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் பணியிட மாற்றங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.
இது தொடர்பாக விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி தனது சமூக வலைதள பதிவில், “தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றும் விரைவில் வெளியாகவுள்ள பணியிட மாற்றப் பட்டியலில் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.
தற்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனாரும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினர் செயலாளருமான விஜயபாஸ்கர் (பெயர் தற்செயலாக ஒத்துப்போவது சுவாரஸ்யம் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, “ஊழலற்ற ஆட்சி” என்ற அரசின் வாக்குறுதியை நிலைநிறுத்தும் வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தவெக தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வரும் விசிக நிர்வாகியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், எஸ்.எஸ். பாலாஜி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் அல்லது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
