தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியாததால் 234 தொகுதிகளுக்கும் பிரத்யேக வீடியோ பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக கிடைத்த பனையூர் வட்டார தகவலின் படி, “தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் பின் விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகளை தொடர்ந்து திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் பிரசாரம் செய்துள்ளார். அடுத்ததாக வேலூரில் வரும் 23ல் கூட்டம் நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 27 மாவட்டங்களுக்கு விஜய் ஒருமுறை கூட இன்னும் செல்லவில்லை. மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி பல மாவட்டங்களுக்கு விஜய்யால் நேரடியாக செல்ல முடியாது. இதனால் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை தவிர, 234 தொகுதிகளிலும் வீடியோ பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக” தெரிவிக்கிறது அந்த தகவல்.

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் அவர்களின் பெயர்களை சொல்லி தொகுதிக்கான சில வாக்குறுதிகளுடன் தனித்தனி வீடியோ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 10 தொகுதிகளுக்கான வீடியோ வெளியிடப்படும் எனவும் அதை தொகுதி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ள விஜய் இதுவே போதும் என்ற மனநிலையில் இருக்கிறாராம்.

இது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் கூறுகையில், “வீடியோ பிரசாரத்தை தேர்தலில் ஒரு அம்சமாகத் தான் செய்ய வேண்டும். அதையே பிரதானமாக செய்ய தலைமை திட்டமிடுவது அதிர்ச்சியாக உள்ளது. விஜய் தன் முடிவை மாற்றி நேரில் சென்று மக்களை சந்திக்க வேண்டும்” என முணுமுக்கின்றனர்.

இந்த தகவல் ஒருபுறமிருக்க, “வரும் மார்ச் மாதம் தொடங்கி விஜய் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடவிருக்கிறார்” என்கின்றனர் சில அரசியல் நோக்கர்கள். வீடியோ பிரச்சாரமா? நேரடி பிரச்சாரமா? என்பது மார்ச் மாத சுற்றுப்பயணத்திட்டம் ஒன்று வெளியாகும் போது தெரிந்துவிடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version