ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைத்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
தவெகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைக்கும் உரிமையை விஜய் ஆளுநரிடம் கோர உள்ளார். தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) விசிக (2) மற்றும் ஐயூஎம் எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை தவெக பெற்றுள்ளது.
இன்று விசிக தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். ஆதரவு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் நேரில் வழங்கினார். இந்த முக்கிய நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா “வெற்றி… வெற்றி…” என மகிழ்ச்சியுடன் பேட்டி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதை உறுதி செய்யும் வகையிலும் – என்னுடைய அரசியல் ஆசான், வழிகாட்டி அண்ணன் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து, விசிக-வின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முன்னதாக விசிக எம்.பி. ரவிக்குமார் , “தவெக ஆட்சியமைக்க அமைச்சர் பதவி கோருவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்” என தெளிவுபடுத்தியிருந்தார். துணை முதலமைச்சர் உள்ளிட்ட எந்தப் பதவியையும் விசிக கோரவில்லை என்பதை உறுதிப்படுத்திய வகையில், நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விசிக உள்ளிட்ட இடதுசாரி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுதியான ஆதரவு விஜய்க்கு பெரும்பான்மை பலத்தை அளித்துள்ளது. விரைவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர உள்ள நிலையில், பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.
