தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. முதன்முறையாக களம்கண்டுள்ள தவெக, இந்த தேர்தலில் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் மேலோங்கி உள்ளது. இந்த நிலையில், தேர்தல் முடிந்த கையோடு ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய்.
கடந்த 28-ம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் சென்ற அவர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வேல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சென்றவர், சாய்பாபாவை தரிசனம் செய்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், விஜய் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை வேளாங்கண்ணி செல்லும் அவர், ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் காலை 5 மணியளவில் பிரார்த்தனை செய்யவுள்ளர்.
தொடர்ந்து நாகூர் தர்காவில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார். முன்னதாக நேற்று தவெக தலைமை அலுவலகமான பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
