மிழக ஆளுநருடனான சந்திப்பைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

தவெகவுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து,  தவெகவின் பெரும்பான்மை பலம்  120 ஆக அதிகரித்தது.

தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) விசிக (2) மற்றும் ஐயூஎம் எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை தவெக பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் அர்லேகரை சந்திக்க சென்ற விஜய்க்கு, ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாதி வழியிலேயே தனது வீடு திரும்பினார்.

இது குறித்த தகவல் பரவியதும், ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்படக்கூடாது என்றும், உடனடியாக அவரை பதவியேற்க அழைக்க வேண்டும் என்றும் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு  கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, திடீர் திருப்பமாக, ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய்க்கு மீண்டும் சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விஜய் மீண்டும் சுமார் மாலை 6.30 மணி அளவில் ஆளுநர் மாளிகை சென்றார்.

அவருடன் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த கட்சித் தலைவர்களுடன் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து, பெரும்பான்மை பலத்துக்கான 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்பு

சந்திப்பின்போது விஜய் நாளை பிற்பகல் 3.15 மணி அளவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்க அனுமதி கோரப்பட்ட நிலையில், ஆளுநரும் அதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் முதலமைச்சராக பதவியேற்பார். அவருடன் தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ், வெங்கட்ரமனன், நிர்மல் குமார் உள்ளிட்ட 9 பேர் அமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தவெகவுக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிள்ளியூர் ராஜேஷ், விஸ்வநாதன் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி பங்கேற்பு?

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில்  பதவி ஏற்பு விழா நடை பெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியது.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தவெகவினர் கொண்டாட்டம்

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பது உறுதியாகிவிட்டதைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் அருகிலும் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version