திருவனந்தபுரம்: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நடைபெற்ற அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 5,000 வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் முதல்வர் வி.டி. சதீசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக கேரளாவிலும் இளைஞர்கள், மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், இந்த அமைதியான போராட்டத்துக்கு எதிராக போலீசார் தண்ணீர் பீய்ச்சி, தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஜனநாயகத்துக்கு எதிரான வழக்குகளை பதிவு செய்துள்ளதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) உள்ளிட்ட அமைப்புகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற உறுதி அளித்துள்ளது. பீகார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான UDF அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாதது ஏன் என்பதை பினராயி கேள்வி எழுப்பியுள்ளார்.

“டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் நீங்களும் இணைந்தீர்கள். ஆனால், கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக அமைதியாக போராடியவர்கள் மீது வழக்குகள் தொடர்கின்றன. இது என்ன நியாயம்?” என அவர் கடிதத்தில் வினவியுள்ளார். எர்ணாகுளத்தில் பாடகர் வேடன் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கிரிமினல் பதிவு இல்லாமல் விடுவிக்க வேண்டும், போராட்ட வீடியோக்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினராயி வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த வழக்குகள் தொடர அனுமதிக்கக் கூடாது என்ற அவரது கோரிக்கை, கல்வி முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளுடன் ஒத்துப்போகிறது.

இந்தக் கடிதம் கேரள அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் உறுதிமொழிக்கு ஏற்ப மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பது பினராயியின் முக்கிய வாதமாக உள்ளது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது இப்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version