அரசியல் குடும்பத்தின் வாரிசாகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினை திமுகவின் அரசியல் முகமாக்கும் முயற்சியின் முன்னெடுப்புதான் சினிமாவில் அவர் முகம் காட்டியது.
ஒரு சில படங்களில் நடித்தாலும் தமிழ்நாட்டு மக்களிடையேயும் தன்னை அறிமுகம் செய்து கொண்ட உதயநிதிக்கு, திமுகவில் இளைஞரணிச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
தந்தை மு.க.ஸ்டாலினைப் போலவே இளைஞரணியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய உதயநிதி, தந்தை காத்திருந்ததைப் போல நீண்ட காலம் எல்லாம் காத்திருக்காமல் எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்தப் படி நிலைகளுக்கு தாவிச் சென்றார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரத்துக்காக 2021 தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி அவருக்கு வழங்கப்பட்டு, அதில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.
அவருக்கு 2022-ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 2024-இல் துணை முதலமைச்சராகவும் பெருமைக்குரிய பதவியில் அமர்த்தப்பட்டார்.
இப்படி விஸ்வரூப வளர்ச்சி பெற்று வந்த உதயநிதி, 2026இல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் முதலமைச்சராவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. அதாவது வழக்கப்படி முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றாலும், ஒரு சில மாதங்களில் அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி, உதயநிதியை முதல்வராக்கி விடுவார்கள் என திமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியாகக் கூட இடம்பெற முடியுமா என்னும் வினாவை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு முதலமைச்சராகி விடலாம் என உதயநிதி ஸ்டாலின் கட்டியிருந்த மனக்கோட்டைக்கும் முடிவு கட்டியிருக்கிறது.
