சென்னையில் பள்ளி திறப்பு விழாவின் போது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. பல்லவி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மாநகராட்சி சார்பில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியிலேயே குத்து விளக்கு ஏற்ற சொன்னோம். அப்போது அவர்கள் வெளியே சென்று விட்டனர். இதை அவ்வளவு பெரிய விஷயமாக ஏன் ஆக்க வேண்டும். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் உரிய மரியாதை நிமித்தமாகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அவர் நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்தபோதிலும், அவர் வரும் வரை காத்திருந்துதான் நிகழ்ச்சியையே தொடங்கினோம். நான் ரிப்பனை வெட்டும்போது, அவரும் மற்றொரு கத்திரிக்கோலால் ரிப்பனை வெட்டினார். அவர்களை யாரும் அவமதிக்கவோ, அவதூறாகப் பேசவோ இல்லை.
அனைத்து இடங்களிலும் வழக்கமான புரோட்டோகால் (அரசு மரபு) படியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரண்டாவது நிகழ்ச்சியில், மேடையில் இருந்த பகுதி செயலாளர் ஏன் மெழுகுவர்த்தியை வாங்குகிறார் என்று தெரியவில்லை.
நாங்கள் எப்போதும் நாகரிகமாகவே செயல்பட்டு வருகிறோம். பொதுச் சேவையில் இருப்பவர்கள் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டுப் பிரச்சினை செய்ய வேண்டும் என்றே செயல்படுபவர்களை நாம் என்ன செய்ய முடியும்?” என மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
