முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவருமான அண்ணாமலை, பா.ஜ.க.வில் இருந்து விலகிய பின்னர் ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய சமூக இயக்கத்தை தொடங்கினார். அரசியல் மாற்றம் மற்றும் சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் ஏராளமானோர் இணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களை சமூக மற்றும் அரசியல் ரீதியாக தயார்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த இயக்கம் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் பெரிய மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மாநாட்டில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, அமைப்பின் இரண்டாவது மாநாட்டை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வரும் 26-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த மாநாடு ரத்து செய்யப்படுவதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் நடைபெற இருந்த மாநாட்டுக்கு பதிலாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு மிகப்பெரிய சமூகநல விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பொதுமக்களிடையே பசுமை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி, இடம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு, அடுத்தகட்டமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version