முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளையொட்டி, ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். கலாம் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தி வரும் மலரஞ்சலி நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அண்ணாமலையும் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அப்துல் கலாமின் கொள்கைகளை தனது அமைப்பின் மூலம் முன்னெடுக்கப் போவதாக உறுதியுடன் தெரிவித்தார். “அறிவியலும் ஆன்மீகமும் இணைந்து செல்ல வேண்டும் என்பது கலாம் அய்யாவின் விருப்பம். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு அளவற்றது. மாணவப் பருவத்திலிருந்தே அவரது உரைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். அவரது வழியில் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பை நேர்மையான முறையில் இயக்க முடிவு செய்துள்ளேன். இங்கு வந்து உத்வேகம் பெற்றுச் செல்கிறேன்” என்றார்.

அரசியலில் அறநெறி மற்றும் நல்லெண்ண முறைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என விரும்பிய கலாம், தகுதியானவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து புத்தகங்களும் எழுதியுள்ளார். “கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் எங்கள் பயணம் தொடரும்” என்று அண்ணாமலை கூறினார்.

மேலும், அக்டோபர் 15-ம் தேதி கோவையில் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ‘அரசியல் அறநெறிக்கான மையம்’ என்ற பெயரில் ஒரு மையத்தைத் தொடங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த மையம் மூலம் ஒரு ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேர் தகுதி பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்துள்ளதால் அரசியல் பேச விரும்பவில்லை” என்று கூறிவிட்டு அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version