இந்திய கால்பந்து அணி இதுவரை உலகக் கோப்பையின் பிரதான சுற்றில்  ஒருமுறை கூட விளையாடியது இல்லைஇருப்பினும், வரலாறு ஒரு முக்கிய வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்கியது. அதாவது, 1950-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்திய அணியுடன் விளையாட வேண்டிய பர்மா (மியான்மர்) மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகள் தொடரிலிருந்து விலகின.

இதனால் இந்தியா தானாகவே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றும், போதிய நிதி வசதி இல்லாதது, நீண்ட தூரப் பயணம் மற்றும் வெறும் காலில் விளையாட ஃபிஃபா தடை விதித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய அணி அப்போது பிரேசில் செல்லவில்லை. அதுவே இந்தியா உலகக் கோப்பைக்கு மிக அருகில் சென்ற முதல் மற்றும் கடைசி தருணமாகும்.

2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெறாதது ஏன்? இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 32-லிருந்து 48 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஆசிய கண்டத்திற்கான தகுதி இடங்களும் 8 ஆக அதிகரிக்கப்பட்டன. இவ்வளவு பெரிய வாய்ப்பு இருந்தும் இந்தியா தகுதி பெறவில்லை. அதற்கு முக்கியக் காரணங்கள் என்னவென்றால், ஆசிய மண்டல தகுதிச் சுற்றின் இரண்டாம் சுற்றில், குரூப் ‘ஏ’ பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்தியா இடம்பெற்றிருந்தது.

அடுத்த சுற்றுக்கு முன்னேற குரூப்பில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், இந்தியா 6 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 டிரா மற்றும் 3 தோல்விகளுடன் 3-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது.

சொந்த மண்ணில் (கொல்கத்தாவில்) பலவீனமான ஆப்கானிஸ்தான் அணியிடம் 1-2 என தோற்றதும், கத்தார் அணிக்கு எதிரான கடைசி மற்றும் தீர்க்கமான போட்டியில் 1-2 என்ற கணக்கில் சர்ச்சைக்குரிய கோல் மூலம் வீழ்ந்ததும் இந்தியாவின் உலகக் கோப்பை கனவை முற்றிலுமாகத் தகர்த்தன.

இந்திய கால்பந்தின் ஜாம்பவான் கேப்டன் சுனில் சேத்ரி இந்த தகுதிச் சுற்று போட்டிகளின் நடுவே (ஜூன் 2024-ல் குவைத்துக்கு எதிரான போட்டிக்குப் பின்) சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார். அவரின் ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியில் தொடர்ச்சியாக கோல் அடிப்பதில் பெரும் தொய்வு ஏற்பட்டது தகுதி இழப்பிற்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தது.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றிலிருந்து வெளியேறிய இந்திய அணி, தற்போது ஆசியக் கோப்பை (AFC Asian Cup 2027) தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வருகிறது. இந்திய சூப்பர் லீக்  போன்ற தொடர்கள் மூலம் இளம் வீரர்கள் உருவாகி வருவதால், வருங்கால உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தகுதி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர். 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version