திமுக சட்டமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் தவெக அமைச்சர் நிர்மல் குமார் வைத்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
”தமிழ்நாட்டில் பரவலாக மின் கட்டணம் கூடுதலாக விதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், திமுக தலைவர் வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பேசுவதாகவும் கூறியவர், ஒரு பொறுப்பான அமைச்சர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், எதிராளிகளை குறைவாக மதிப்பிடுகிறார் என்றும், திமுக தலைவரின் வரலாறு, அவர் வயது, அவர் அனுபவம் , அவர் வகித்த பதவிகளை பற்றி தெரிந்து கொண்டு நிர்மல் குமார் பேச வேண்டும்.
அமைச்சர் நிர்மல் குமார் தன் வேலைகளை தவிர, மற்ற துறைகளின் வேலையையும் பார்ப்பதால், தன் துறை சார்ந்த அறிக்கையை கூட தெரியாமல் பேசுகிறார். ஆட்சிமாற்றம் வந்த பிறகும், தவறுகள் நடப்பது ஏன்? புகார்களே வரவில்லை என்று சொல்லிவிட்டு அதை சரிசெய்வதாக சொல்கிறார்கள்.
மின்துறை என்பது மிகப்பெரிய துறை. அந்தத் துறையில் என்னென்ன டிவிஷன் இருக்கிறது அதை எப்படி இயங்குகிறது அதில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அவர் தெரிந்து கொண்டு ஆய்வு செய்து அதை பற்றி பேசலாம்.
ஆனால் அவர் முறையாக கவனம் செலுத்தாததால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், அவர் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் நன்றாக இருக்கும். மக்களின் பிரச்சினைகள் என்னென்ன என்று ஆய்வு செய்து அதை சரி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
தவெக ஆட்சி, மறைத்து திரை போட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள். முதலமைச்சர் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியே. எந்த கேள்வி கேட்டாலும் எதற்கும் பதில் சொல்வதில்லை. ஆட்சி அமைந்து 6 மாத காலத்திற்குள் விமர்சனம் செய்யக்கூடாது என்றார்கள். ஆனால் தினந்தோறும் ஏகப்பட்ட பிரச்சனை வரும்போது விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது.
நாங்களும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் எங்களுக்கும் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதனால் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற கடமை எங்களுக்கும் இருக்கும். தவெக, அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. திமுகவின் திட்டங்களுக்கு பெயர் மாற்றுகிறார்கள். மக்கள் ஏகோபித்து 234 தொகுதியையும் கையில் கொடுத்ததாக திமுக திட்டங்களுக்கு பெயர் மாற்றுகிறார்கள்.
முதலமைச்சர் என்றாலே மு.க ஸ்டாலின் பேருதான் ஞாபகம் வருகிறது. அதனால்தான் திமுக திட்டங்களுக்கு பெயர் மாற்றுகிறார் போல; தவெக அரசு தன் இயலாமையை மறைக்க திமுக திட்டங்களுக்கு பெயர் மாற்றுகிறார்கள். அரசு பேருந்துகளிலும், அரசு போக்குவரத்து துறை செயலிலும் கலர் மாற்றுகிறார்கள். எல்லாவற்றையும் குறித்தும் மக்கள் முடிவு செய்வார்கள்.
மக்களும் அங்கங்கே குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பேருந்து கலர் மாற்றுவது பேருந்து செயலியில் கலர் மாற்றுவது எல்லாம் செய்வதை விட, மக்களுக்கு தேவையான திட்டங்களை, செயல்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும். காவிரி விவகாரத்தில், திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் தஞ்சையில் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். விவசாயிகள்
பயிர் கடன் ரத்து , காவிரி மேகதாது விவகாரம் போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
மேகதாது பிரச்சினைக்காக, கர்நாடகாவிற்கு விஜய் செல்வதாக வேளாண் துறை அமைச்சர் கூறுகிறார்.
ஆனால் முதலமைச்சர் தான் அதை முடிவு செய்வார் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறுகிறார். மற்றொரு அமைச்சரோ, இதை நீதிமன்றம் தான் தீர்க்க முடியும் என்று கூறுகிறார்.
நீதிமன்றம் தான் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் விஜய் கர்நாடகா செல்ல அவசியம் என்ன? தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எதுவும் அதிகாரப்பூர்வமாக வருவது இல்லை. எல்லாமே தகவலாக தான் வருகிறது. தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த இடதுசாரிகள், தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாலும் இந்த அரசு கள்ள மௌனத்தை காக்கிறது.பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வாங்குவது சாத்தியமா? என்ற கேள்விக்கு, எல்லா விஷயங்களை விளையாட்டு போக்காக நினைக்கிறார்கள். இந்த ஆட்சியில் எல்லாமே ரீல்ஸ் தான்” என்று கூறினார்.
