மேட்டூர் அணை திறப்பு மற்றும் ஊரக உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று (ஜூன் 4) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உயர்நிலைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் என். ஆனந்த், தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை சார்ந்த முக்கிய செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததாலும், அணைக்கு வரும் நீரின் வரத்து குறைவாக உள்ளதாலும், திட்டமிட்டபடி ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணை திறப்பு தள்ளிப்போகும் பட்சத்தில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமும், குறுவை சாகுபடியும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு என்னென்ன மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தி விவசாயத்தைத் தொடங்குவதற்கான மின் விநியோகத்தை முறைப்படுத்துதல். விவசாயிகளுக்குத் தேவையான குறுவை தொகுப்பு திட்டங்கள், மானிய விலையில் விதைகள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல். அணை திறப்பதற்குள் விடுபட்ட தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்து, தண்ணீர் திறக்கப்படும் போது அது கடைகோடி வரை சென்றடைவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணை திறப்பு விவகாரம் மட்டுமன்றி, ஊரக உள்ளாட்சித் துறையின் கீழ் நிலுவையில் உள்ள திட்டங்கள், கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்தும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
