தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய இயக்குனர் சங்கர் ஜிவாலின் பணிக்காலம் ஆகஸ்ட் மாதவாக்கில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் சீமா அகர்வால்,
சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ் குமார், அபய் குமார் ஆகிய 4 பேரும் வரிசையில் உள்ளனர். இவர்கள் 4 பேரும் டிஜிபி தரத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், ஏடிஜிபி தரத்தில் உள்ள ஒரு அதிகாரியை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சில நகர்வுகள் நடத்தப்படுவதாக செய்திகள் கசிந்தன. இத்தகைய தவறான முன்னுதாரணம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே எதிர்ப்பு மற்றும் தேவையற்ற பிரச்சனைகளைக் கிளப்பும் என்பதால் அந்த ஏடிஜிபி – டிஜிபியாக தரம் உயரும் காலம் வரை தற்போதுள்ள திரு.சங்கர் ஜிவாலுக்கே பணி நீட்டிப்பு அளித்து அமரவைக்கவும் ஒரு காய் நகர்த்தல் நடைபெறுவதாகத் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன.
இது, தகுதி படைத்த டிஜிபி தரத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு இடையே தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்கள். இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைவது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் இதனை பெரிய அளவில் எதிர்த்து விமர்சிக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.
மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டல்களை மீறும் செயலாகவும் இது அமையலாம் என்பதுடன், யாராவது பொதுநலன் வழக்குத் தொடுத்தால் அரசுக்குதான் அவப்பெயர் ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஞ்சாயத்தை சந்தித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த பஞ்சாயத்தாக இது அமையவும் வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.