இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அண்மையில் தொகுப்பாளர் டிடியுடன் கலந்துகொண்ட நேர்காணலில் பேசிய கருத்து அவசர அவசரமாக வைரல் ஆக்கப்பட்டிருக்கிறது. என்ன ஏது என முழு காணொளியைக் கூடப் பார்க்காமல் ஒருவர் கருத்தின் மீது சர்ச்சையைக் கிளப்ப இவ்வளவு அவசரம் என்ன வேண்டியிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
என்ன சொன்னார் ஏ.ஆர் ரஹ்மான்?
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பிரபல தொகுப்பாளர் திவ்ய தர்ஷினியுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் ஏ.ஆர் ரஹ்மானைப் பற்றி பல புகழ்த் துதிகளை அடுக்கிக் கொண்டே வந்த டிடி, சமூக ஊடகங்களில் அவரைப் பெரிய பாய் என்று குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி தானும் அப்பெயரைப் பெருமையோடு குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் ஏ.ஆர் ரஹ்மானை பெரிய பாய் என்றும் யுவன் சங்கர் ராஜாவைச் சின்ன பாய் என்றும் அழைக்கும் வழக்கம் இருப்பதால், அதைக் குறிக்கும் வகையில் அப்பதத்தை டிடி பயன்படுத்தினார். அதைக் கேட்டதும் “என்ன பெரிய பாயா” என்று கேட்ட ஏ.ஆர் ரஹ்மான் “அது வேண்டாம். எனக்குப் பிடிக்கவில்லை” என்று கூறினார்.
எங்கே சர்ச்சை ஆனது?
இந்த நேர்காணல் குறித்த முன்னோட்ட காணொளி ஒன்று வெளியானது. அதில் டிடி சொன்னதுக்கு ஏ.ஆர் ரஹ்மான் சொன்ன மறுமொழியில், “என்ன பெரிய பாயா? எனக்கு அது பிடிக்கல, என்ன கசாப் கடையா வெச்சிருக்க” என்று கூறியிருப்பது பதிவாகியுள்ளது.
https://x.com/kollywoodnow/status/1924510074242007186
இதைப் பார்த்த பலரும் என்ன கசாப் கடை வைத்திருப்பது அவ்வளவு கேவலமா? இசையமைப்பாளர் என்றால் கசாப் கடை வைத்திருப்பவர்களை ஏ.ஆர் ரஹ்மான் மட்டமாகப் பேசுவாரா என்று நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்துள்ளனர்.
https://x.com/RamThevar9/status/1924784328736649455
உண்மை என்ன?
தொகுப்பாளர் டிடி பெரிய பாய் என்று குறிப்பிட்டதும் “எனக்கு அது பிடிக்கவில்லை” என்றார் ஏ.ஆர் ரஹ்மான். உடனே “கட்.. கட்.. அந்தப் பெயரை இன்று முதல் கட் செய்து விடுவோம்” என்று கிண்டலாக கேமராவை நோக்கி கட் சொன்னார் டிடி. அதையும் கிண்டல் செய்யும் ஏ.ஆர் ரஹ்மான் “என்ன கட் கட்-ன்னு கசாப் கடையா வெச்சிருக்க” என்று டிடியை கிண்டலடிக்கிறார். மிகத் தெளிவாக இடைப்பட்ட அந்தப் பகுதியை எடிட்டில் வெட்டித் தூக்கிவிட்டு வெளியிடப்பட்ட புரோமோவைப் பார்த்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மான் மீது பொங்கியிருக்கிறார்கள் பலர்.
https://x.com/i/status/1924767927284203905
நிதானம் தேவை
முழு காணொலியைக் கூட பார்க்காமல், வெறும் புரோமோவில் வெளியான கருத்துகளை வைத்துக் கொண்டு ஒருவர் மீது கண்டனங்கள் தெரிவிப்பதும், அதை ஏதோ மிக முக்கிய விஷயமாக ஊடகங்கள் பெரிதாக்குவதும்தான் இந்தக் கதையில் நடந்துள்ளது. திரைப் பிரபலமோ, யாரோ தவறான கருத்து தெரிவித்தால் அதை உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டியது ஊடகங்களின் முக்கிய கடமை. கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது பொதுமக்களின் அடிப்படை உரிமை. ஆனால் அதில் இத்தனை அவசரம் காட்ட வேண்டிய தேவை என்னவிருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் இணையவாசிகள் சிலர். ஒரு கருத்தை வெளியிடும்போது அவசரம் தவிர்த்து நிதானம் கடைபிடிக்க வேண்டியது கடமையல்லவா!