சென்னையில் இன்று காலை முதலே பரவலாகக் காணப்படும் மேகமூட்டமான சூழ்நிலை மற்றும் சூறைக்காற்று வீசியது உள்ளிட்ட காரணங்கள் குறித்து வானிலை ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மத்திய வங்கக்கடல் பகுதியில் சுமார் 700 hPa வளிமண்டல அடுக்கில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியும், ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு-தெற்காக நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் இணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த இருவேறு வானிலை அமைப்புகள் காரணமாக, வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை வீசி வந்த வறண்ட வடமேற்கு காற்று மாறி, வங்கக்கடலில் இருந்து அதிக ஈரப்பதம் கொண்ட வடகிழக்கு மற்றும் தரைக்காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இன்றைய வானிலையில் கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சமாக, வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே கடல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. காலை 08:00 மணி முதல் 10:00 மணிக்குள் கடலில் இருந்து நிலப்பகுதியை நோக்கி மணிக்கு 25 முதல் 30 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.
இந்த ஈரப்பதம் மிக்க கடல் காற்று சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களுக்குள் பெருமளவில் ஊடுருவியதால், வளிமண்டலத்தின் கீழ் மற்றும் இடைப்பட்ட அடுக்குகளில் அடர்ந்த மேகக்கூட்டங்கள் உருவாகின. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதேசமயம் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில், இன்றைய பகல் நேர வெப்பநிலை பெருமளவு குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது.
இந்த அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் உள்ளூர் வெப்பச்சலனம் காரணமாக, சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையோ அல்லது தூறலோ பதிவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
