லடாக் பகுதியில் இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், உயர் அதிகாரிகள் உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் நூலிழப்பில் உயிர் தப்பியுள்ளனர்.
இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் எச்.ஏ.எல் சீட்டா (HAL Cheetah) ரக ஹெலிகாப்டர் ஒன்று, லடாக் பகுதியில் வழக்கமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கித் தரையிறங்க முடியாமல் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ மேஜர் ஜெனரல் சச்சின் மேக்தா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் புன்னகையுடன் எடுத்த ‘செஃல்பி’ புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழலிலும் ராணுவ வீரர்களின் மன தைரியத்தை இப்புகைப்படம் காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மிகவும் நம்பகமான இந்தச் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான துல்லியமான காரணம் என்ன? தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலையா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த இந்திய ராணுவம் உடனடியாக உத்தரவிட்டுள்ளது.
