ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா (74) மற்றும் ஷஃபாலி வர்மா (55) ஆகியோரின் சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இது மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
பின்னர் 210 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்மிருதி – ஷஃபாலி அதிரடி
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து தனது முடிவுக்காக விரைவிலேயே வருத்தப்பட்டது. இந்திய தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
முதல் 5 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்தது. பவர்பிளே முடிவில் 59 ரன்கள் குவித்த இந்தியா, மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது சிறந்த பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்தது.
10 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்தது. ஷஃபாலி வர்மா 34 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் தனது முதல் டி20 உலகக் கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார்.
12-வது ஓவரில் 115 ரன்கள் கூட்டணிக்குப் பிறகு ஷஃபாலி 38 பந்துகளில் 55 ரன்கள் (10 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி, 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 74 ரன்கள் (11 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் 8 பந்துகளில் 20 ரன்கள், ஹர்மன்ப்ரீத் கவுர் 12 ரன்கள், தீப்தி சர்மா 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்ததால் இந்தியா 209/5 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
நெதர்லாந்தை சுருட்டிய இந்திய பந்துவீச்சு
210 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஹீதர் சீகர்ஸ் மற்றும் ஃபீபே மொல்கென்போர் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
ஆனால் நந்தினி சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்திய பிறகு இந்தியா போட்டியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 10 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து 68/2 என்ற நிலையில் இருந்தது.
நடுப்பகுதியில் ஷஃபாலி வர்மா மற்றும் நந்தினி சர்மா தலா முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர். 13.4 ஓவர்களில் நெதர்லாந்து 96/4 என்ற நிலையில் இருந்தபோது, ஸ்ரீ சரணி மற்றும் ஷஃபாலி இணைந்து விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தினர். இதனால் நெதர்லாந்து அணி 114 ரன்களுக்கு சுருண்டது.
ஸ்ரீ சரணி – 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையு, ஷஃபாலி வர்மா 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், நந்தினி சர்மா 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
