இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், ஐபிஎல் 2027 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைய உள்ளார். சுப்மன் கில், அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களை உருவாக்கிய யுவராஜ் சிங்கின் அனுபவம், இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி அணிக்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் சக வீரர்கள் ஆஷிஷ் நெஹ்ரா, ஜாகீர் கான் மற்றும் வீரேந்திர சேவாக் வரிசையில், யுவராஜும் ஐபிஎல் பயிற்சியாளர் களத்தில் நுழைகிறார். களத்தில் இறங்கி இளம் வீரர்களுக்கு நேரடியாகப் பயிற்சி அளிக்கும் இவரது அணுகுமுறை அணிக்குச் சாதகமாக இருக்கும் என டெல்லி அணி நிர்வாகம் நம்புகிறது.
டெல்லி அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் சௌரவ் கங்குலி, மீண்டும் ஆண்கள் அணியின் பொறுப்புகளைக் கவனிக்க உள்ளார். அவர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவும் அதிக வாய்ப்புள்ளது.
இதுமட்டுமல்லாமல், டெல்லி கேபிடல்ஸ் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குல்தீப் யாதவ் ட்ரேட் மூலம் (Trade) ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்குத் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்பையை வெல்வதை இலக்காகக் கொண்டுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இந்த மாற்றங்கள் மூலம் புதிய உற்சாகத்துடன் ஐபிஎல் 2027 தொடரை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
