2006-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் 19 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது பயங்கரவாத தடுப்புப் படை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில்,

பாகிஸ்தானைச் சேர்ந்த சிலரை நேபாள எல்லை வழியாக மும்பைக்கு அழைத்து வந்துள்ளார் கமல் அகமது அன்சாரி. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இவர், ஒரு ரயிலில் வெடிகுண்டை வைத்துள்ளார். அது மதுங்கா ரயில் நிலையத்தில் வெடித்தது. முகமது பைசல் ஷேக் என்பவர் பயிற்சி பெறுவதற்காக 2 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அத்துடன் மேலும் சில இளைஞர்களை பாகிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைத்துள்ளார்.

குண்டு வெடிப்பை நிகழ்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். ஹவாலா வழியில் பணத்தைப் பெற்றுள்ள இவர், ஒரு ரயிலில் வெடிகுண்டை வைத்துள்ளார். அது ஜோகேஷ்வரி என்ற இடத்தில் வெடித்தது. வெடிகுண்டு சம்பவம் நடந்தபோது, தடை செய்யப்பட்ட சிமி அமைப்பில் மகாராஷ்டிர மாநில இணை செயலாளராக எடேஷம் குத்புதின் சித்திகி பதவி வகித்துள்ளார். சதி ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்ற இவர், ரயில்களில் வேவு பார்த்துள்ளார். இவரும் ஒரு ரயிலில் வெடிகுண்டை வைத்துள்ளார். அது மீரா சாலை ரயில் நிலையத்தில் வெடித்தது.

முஜம்மில் ஷேக், சோஹைல் முகமது ஷேக், ஜமிர் அகமது ஷேக் மற்றும் நவீத் ஹுசைன் கான் ஆகியோர் சதி ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரயில்களில் வேவு பார்த்துள்ளனர். இதில் நவீத், ரயிலில் வைத்த வெடிகுண்டு கர் ரயில் நிலையத்தில் வெடித்தது. ஆசிப் கான் வெடிமருந்துகளை வாங்கியுள்ளார். இவர் வைத்த வெடிகுண்டு போரி விலி ரயில் நிலையத்தில் வெடித்தது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தன்விர் அகமது, சதி ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். கோவந்தி புறநகர் ரயிலில் வெடிகுண்டு வைத்தபோது இவர் உடன் இருந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் வங்கதேச எல்லை வழியாக மும்பைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார் முகமது மஜித் ஷபி. குண்டு வெடித்த பின்னர் அவர்களை மீண்டும் தாயகம் அனுப்பி வைத்துள்ளார்.

ஷேக் ஆலம் என்பவர் கோவந்தியில் உள்ள தனது வீட்டில் வெடிகுண்டுகளை தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளார். அங்கு முகமது சாஜித் அன்சாரி வெடிகுண்டுகளை தயாரித்துள்ளார். அந்த குண்டுகள்தான் நாச வேலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய பங்காற்றிய 13 பாகிஸ்தானியர்கள் இதுவரை தலைமறைவாக உள்ளனர்.

13 பாகிஸ்தானியர்கள் உட்பட அனைத்து குற்றவாளிகளும் வெடி பொருட்களுடன் கூடிய 7 பைகளுடன் முகமது பைசல் அடா-உர் ரஹ்மான் வீட்டிலிருந்து பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு, சர்ச்கேட் ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். மாலை நேரத்தில் அங்கிருந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் வெடிகுண்டை வைத்துள்ளனர். வெடிகுண்டு வைப்பதற்காக, மும்பையில் உள்ள உலக வர்த்தக மையம், மும்பை பங்குச் சந்தை, மகாலட்சுமி கோயில், சித்தி விநாயகர் கோயில் மற்றும் உள்ளூர் ரயில்கள் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் குற்றவாளிகள் திட்டமிட்டுள்ளனர்.

எனினும், மற்ற இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், பாதுகாப்பு கெடுபிடிகள் குறைவாக உள்ள புற நகர் ரயில்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளனர். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை 2007-ம் ஆண்டு தொடங்கியது. 2008-ம் ஆண்டு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 2010-ம் ஆண்டு தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டது. 2014-ம் ஆண்உ குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை முடிந்தது. 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட 13 பேரில்12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version