வெறுப்பு ஓரே இரவில் ஏற்படாது என்று திரிபுரா மாணவர் மரணம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
திரிபுராவைச் சேர்ந்த 2 சகோதரர்கள் மீது டேராடூனில் நடத்தப்பட்ட இனவெறி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது:
இந்த சம்பவம் ஒரு வெறுப்புக் குற்றம். பாஜகவின் வெறுப்புணர்வை வளர்க்கும் தலைமையால் இத்தகைய வன்முறை சாதாரணமாக்கப்பட்ட நீண்டகால சூழலின் விளைவு இது.
டேராடூனில் ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேலுக்கு நடந்தது ஒரு கொடூரமான வெறுப்பு குற்றம். வெறுப்பு ஒரே இரவில் உருவாகாது. பல ஆண்டுகளாக, நச்சுத்தன்மை வாய்ந்த உள்ளடக்கம் மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் மூலம் அது தினமும், குறிப்பாக நமது இளைஞர்களிடையே தூண்டப்பட்டு வருகிறது. ஆளும் பாஜகவின் வெறுப்புணர்வை பரப்பும் தலைமை அதை இயல்பாக்கியுள்ளது.
மேலும், இந்தியா மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது, பயம் மற்றும் துஷ்பிரயோகம் அல்ல என்றும் அவர் கூறினார். நமது நாடு அன்பு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. சக இந்தியர்களை குறிவைப்பதை கண்டும் காணாமல் இருக்கும் ஒரு இறந்த சமூகமாக நாம் மாறக்கூடாது. நமது நாடு எந்த திசையில் செல்ல அனுமதிக்கிறோம் என்பதை நாம் சுயபரிசோதனை செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
