சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 14 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
பிஜாப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் மாவட்ட ரிசர்வ் குழுவினருக்கும் (டிஆர்ஜி) மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடநது வருகிறது . இந்த மோதல் நடந்த இடத்திலிருந்து இரண்டு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் கோண்டா பகுதி குழுச் செயலாளர் சச்சின் மங்காடும் ஒருவர் ஆவார். மோதல் நடந்த இடத்திலிருந்து ஏகே-47 மற்றும் இன்சாஸ் துப்பாக்கிகள் உட்பட தானியங்கி ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட மற்ற நக்சலைட்டுகளின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
பஸ்தர் சரக ஐ.ஜி. பி. சுந்தர்ராஜ் அளித்த தகவலின்படி, தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரை மோதல் நடந்த இடத்திலிருந்து 2 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பஸ்தர் சரகத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினரால் மொத்தம் 14 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாவோயிஸ்டுகள், சுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த 12 மாவோயிஸ்டுகள் என மொத்தம் 14 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை இன்னும் தொடர்வதால், சம்பந்தப்பட்ட வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மோதல் நடந்த சரியான இடம், சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை மற்றும் பிற முக்கியத் தகவல்களை இந்த நேரத்தில் பகிர முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த நடவடிக்கை முடிந்த பிறகு, அதுகுறித்த விரிவான தகவல்கள் பகிரப்படும் என்றும் அவர் கூறினார்.
2025-ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த பல்வேறு மோதல்களில் 285 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில், பிஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 257 நக்சலைட்டுகளும், ராய்ப்பூர் பிரிவில் உள்ள கரியபந்த் மாவட்டத்தில் 27 பேரும் கொல்லப்பட்டனர். முன்னதாக, டிசம்பர் 20 அன்று, சுக்மாவில் பாதுகாப்புப் படையினர் பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மீட்டெடுத்தனர்.
