உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு கிராமமே மூழ்கிய நிலையில் இதுவரை 17 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகேயுள்ள தாராலி என்ற கிராமத்தில் திடீரென மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அங்கு உள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் அடித்து செல்லப்பட்டன.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் அடித்து செல்லப்பட்டதாகவும், மண்ணில் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார், எஸ்.டி.ஆர்.எஃப் ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்த வெள்ளம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி கட்டடங்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ஒரு கிராமமே இந்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், இதுவரை 17 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக உத்தராகாண்ட் முழுவதும் பல இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்று ஹல்த்வானி அருகே பக்ரா ஓடையின் பலத்த நீரோட்டத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார், நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) பூஜியாகட் அருகே பெரிய ஓடையில் இரண்டு பேர் மூழ்கி இறந்தனர்.

இரவு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version