கேரளா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த 5 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று(23.06.2025) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி,
கேரளாவில், நிலம்பூர் தொகுதியில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ பி.வி.அன்வர், முதலமைச்சர் பினராயி விஜயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் களமிறங்கின.
பதவியை ராஜினாமா செய்த அன்வர், சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் நடந்த தேர்தல் முடிவில், ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தோல்வியை தழுவினார். அவரை விட 11,077 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன் வெற்றி பெற்றார்.
குஜராத் மாநிலம் விசாவதர் தொகுதியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பூபேந்திர பயானி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். காடி தொகுடியில் பாஜக எம்.எல்.ஏ கர்சன்பாய் சோலங்கி காலமானதால், அங்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவ்விரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவியது. இதில் காடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திரன் சவ்டா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விசாவதர் தொகுதியில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் டொகுதிய்ல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நசிருதீன் அகமது காலமானதால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர், பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதிய்ல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குர்பிரீத் கோகி காலமானதால், இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றது.