தெலங்கானாவில் அமைச்சர்களின் சம்பளத்தில் 50% பிடித்தம் செய்ய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற சுமார் 8,000 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.8,000 கோடி மதிப்பிலான பணிக்கொடை மற்றும் இதர பயன்கள் நிலுவையில் உள்ளன. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், முதியோர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் தாமாக முன்வந்து தங்களது ஊதியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு அடுத்த 100 நாட்களுக்குள் நிலுவைத் தொகைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிதி நெருக்கடியைச் சமாளிக்க இமாச்சல பிரதேச அரசும் அண்மையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க  உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் அமைச்சர்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளின் ஊதியத்திலும் 50 சதவீத பிடித்தம் செய்ய அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காகத் துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, நிதி திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மே 4-ம் தேதி நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த விரிவான கால அட்டவணை வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version