இந்தியா–பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கும், அதைப்பற்றி பிரதமர் மோடி இதுவரை எந்த விளக்கமும் தராததற்கும் எதிராக காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா இணைந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“பாகிஸ்தானுடன் நடந்த இரகசிய சமாதான பேச்சுவார்த்தையைப் பற்றி டிரம்ப் வெளியிட்ட தகவலுக்கு பிரதமர் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை. இது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்புகிறது. இதற்கான விளக்கம் தேவைப்படுகிறது” என அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிக்க: பெயர் மாற்றம் பயனற்றது.. அருணாசல பிரதேசத்தின் உரிமை இந்தியாவுடையதே.. மத்திய அரசு கடும் கண்டனம்!
அத்துடன், “மோடியின் மவுனத்தை எதிர்த்து மற்றும் உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, ‘ஜெய்ஹிந்த்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி முக்கிய அறிவிப்புகளை செய்தியாளர்களுக்கு அறிவிப்பார்” என்றும் கூறினர்.