கேதர்நாத்திற்கு யாத்திரைகாக சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உட்பட 274 பேர் இதுவரை உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் சோகம் அடங்குவதற்குள் உத்தரகாண்டில் மீண்டும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே, டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கி சென்ற ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனதாக செய்தி வெளியானது. பிறகு காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக உத்தரகாண்ட் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரல் முருகேசன் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரின் விமானி உட்பட 5 பெரியவர்கள் 1 குழந்தை இந்த விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் மேல் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத்திற்கு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தேடும் பணி மற்றும் மீட்புபணிகளை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அடுத்தடுத்து நடக்கும் விமான போக்குவரத்து விபத்துகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அத்தோடு விமான போக்குவரத்து துறையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.