கர்நாடகாவில் 14 வயது சிறுவனை 12 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களான 14 வயது மற்றும் 12 வயது சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இருவரும் ரூ.5 மதிப்புள்ள தின்பண்டத்தை கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். தின்பண்டத்தை பகிர்ந்து கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கைகலப்பாகி இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த 12வயது சிறுவன், கத்தியை எடுத்து வந்து 14 வயது சிறுவனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 12 வயது சிறுவனை கைது செய்ய அவனது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு காவல்துறையினரை பார்த்ததும், தான் கொலை செய்தது தெரியாமல், ”அம்மாவை விட்டு வர மாட்டேன்” என கதறி அழுதுள்ளான் அச்சிறுவன். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.