நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தாக்கி மக்கள் காயமடைவது வழக்கம். வீட்டில் தூங்கும் குழந்தைகள் கூட நாய்களின் தாக்குதலுக்கு பலியாகி வரும் நேரத்தில், தெருநாய்கள் ஒரு குழந்தையின் பாதுகாவலர்களாக மாறிய அதிசய சம்பவம் மேற்குவங்கத்தில் நிகழ்ந்துள்ளது. பிறந்த சில மணி நேரங்களிலேயே பச்சிளம் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச்சென்ற நிலையில், மீட்புக் குழு வரும் வரை, இரவு முழுவதும் தெருநாய்கள் பாதுகாத்துள்ளன.
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் ரயில்வே எம்ப்ளாய்ஸ் காலனிக்கு அருகிலுள்ள ஒரு கழிப்பறைக்கு வெளியே குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றுள்ளனர். குழந்தையின் உடலில் இருந்த இரத்தக் கறைகள் கூட துடைக்கப்படவில்லை. இந்தநிலையில், அந்தப் பகுதியிலிருந்து வந்த ஒரு தெருநாய்க் கூட்டம் குழந்தையைப் பார்த்து ஓடி வந்தது. இரவு முழுவதும் குரைக்கவோ அல்லது அசையவோ இல்லாமல் குழந்தையை பாதுகாத்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இரவில் குழந்தையின் அருகில் வேறு யாரையும் நாய்கள் வர அனுமதிக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
காலையில், குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அதை மீட்டனர். இந்த சம்பவத்தை முதலில் பார்த்த சுக்லா என்ற நபர் கூறுகையில், காலை எழுந்தபோது பார்த்த காட்சி இன்னும் எங்களை நடுங்க வைக்கிறது. நாய்கள் ஆக்ரோஷமாக இல்லை. அவை… எச்சரிக்கையுடன் இருந்தன. குழந்தை உயிர் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறதை அவை புரிந்துகொண்டதுபோல் இருந்தது.” என்று கூறினார்..
அந்த நாய்களின் நடத்தை அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவை ஒரு மனிதக் குழந்தையை பாதுகாக்கும் காவலர்களைப் போல அமைதியாகவும் கவனமாகவும் நின்றிருந்தன என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும், குழந்தைக்கு எந்த காயமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்
