பீகாரில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் கமிஷன் அங்கு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. எப்போதும் தேர்தல் கமிஷன் ஆண்டுக்கு 4 முறை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும். ஆனால் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில், வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் ஒரு விரிவான நடவடிக்கை. இந்த நடவடிக்கையில், சுமார் 98,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2003-ம் ஆண்டிற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் என 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாத பட்சத்தில் அவர்களது பெற்றோரின் குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்யலாம் என கூறப்பட்டது. இந்த சிறப்பு திருத்த முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம்தான் முடிவெடுக்க முடியும் என்றும் ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உச்சநீதிமன்றம், ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னரே இந்த நடவடிக்கையை தொடங்கியிருக்கலாமே? என தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டது.
அத்தோடு, “ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக கருதுங்கள். 11 ஆவணங்களின் பட்டியல் முழுமையானது அல்ல என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறியுள்ளார். எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை பரிசீலியுங்கள்” எனக்கூறியது. இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டனர்.
