குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் காட்விக் நகரை நோக்கி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், மேகானி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் உணவு விடுதியில் மோதி பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்புடன் பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 விமானிகள், 10 பணியாளர்கள், 169 இந்தியர்கள் 52 இங்கிலாந்து நாட்டவர், 7 போர்ச்சுகல் நாட்டினர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேர் விபத்தில் உடல்கருகி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்.
இதேபோன்று உணவு விடுதி மற்றும் குடியிருப்புகளைச் சேர்ந்த சிலரும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
10 மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமா? கவனக்குறைவா? உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்து விட்டன. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு காப்புரிமை பெறும் வகையில் விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.