டெல்லியில் இருந்து மகாராஷ்டிராவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களிலேயே அங்கிருந்த மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட மொத்த 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறா, பறவை மோதியதா? என பல்வேறு காரணங்கள் இந்த விபத்துக்கு கூறப்பட்டு வருகிறது. பலரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (20.06.2025) டெல்லியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. 150 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் மகாராஷ்டிரா வான்பரப்பில் நுழந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் மீது எதிர்பாராத விதமாக பறவை ஒன்று மோதியது. சுதாரித்துக் கொண்ட விமானி, அவசரமாக விமானத்தை புனே விமான நிலையத்தில் தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதே வேளை மீண்டும் புனேவில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் செல்லவில்லை. டெல்லிக்கு டிக்கெட் பதிவு செய்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்த நிலையில், டிக்கெட் தொகை திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.