ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டண நடைமுறைகளில் இந்திய ரயில்வே பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய விதிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. இதன்படி, பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்ய விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு (3 நாட்களுக்கு) முன்பாகவே ரத்து செய்தால் மட்டுமே, தற்போதைய நடைமுறைப்படி முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும். கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதைத் தவிர்க்கவும், தேவையற்ற முன்பதிவுகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணத்துடன் சேர்த்து பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும். மேலும், 8 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் செலுத்திய தொகையில் 50% மட்டுமே திருப்பித் தரப்படும். மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாக, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு பைசா கூடத் திரும்பப் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அவசரத் தேவைக்காகப் பயணம் செய்யும் சாதாரணப் பயணிகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
