கேரளாவில் தகாத உறவில் இருந்தவருக்கு பெண் ஒருவர் பூச்சிக் கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் மதிராப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்சில். 38 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அனிசிலுக்கு சோலாடு பகுதியை சேர்ந்த அதீனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாற, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
அந்த வகையில், கடந்த 29-ம் தேதி அதீனாவின் வீட்டிற்கு அன்சில் செல்ல, மறுநாள் காலை விஷமருந்தி மயங்கி கிடப்பதாக, அவரது நண்பர்களுக்கு அதீனா தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற நண்பர்கள் அன்சிலை மீட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், சிகிச்சையில் இருந்த அன்சிலிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் அதீனா தான் தனக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அன்சில் பரிதாபமாக உயிரிழந்தார். அன்சிலின் வாக்குமூலத்தை கொண்டு போலீசார் அதீனாவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அன்சிலுக்கு பூச்சிமருத்து கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.