ஆந்திராவில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த லிவ் இன் டூ கெதரில் இருந்த காதலியை, காதலன் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கொனசீமா மாவட்டம் சவரம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா என்ற இளம்பெண். 22 வயதான இவருக்கு திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார் புஷ்பா. அதனால் சவரம் கிராமத்தில் தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
வேலைத்தேடி கடந்தாண்டு விஜயவாடா சென்றுள்ளார் புஷ்பா. அங்கு ஷேக் ஷமி என்ற 22 வயது இளைஞருடன் புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரின் நட்பும் காதலாக மாற, இருவரும் சவரம் கிராமத்திற்கு அருகே ரசோலி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் இன் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த புஷ்பாவின் தாய் மற்றும் சகோதரர், அவர்களது காதலை ஏற்றுக் கொண்டதால், 4 பேரும் ரசோலியில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் மதுபோதைக்கு அடிமையான ஷேக் ஷமி கடந்த சில மாதங்களாக புஷ்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
புஷ்பாவை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி ஷமி வலியுறுத்தி வந்ததாகவும், அதற்கு புஷ்பா மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 17-ம் தேதி வழக்கம் போல் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஷமி, புஷ்பாவிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கூறி மீண்டும் வலியுறுத்தியுளார். இதற்கு புஷ்பா மீண்டும் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த ஷமி, வீட்டில் இருந்த கத்தியால் புஷ்பாவின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரின் சண்டையையும் தடுக்க முயன்ற புஷ்பாவின் தாய் மற்றும் சகோதரனையும் ஷமி கத்தியால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். கூச்சல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், காயமடைந்த இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் புஷ்பாவின் உடலை மீட்டனர். மேலும் கொலை செய்து விட்டு தப்பியோடிய ஷேக் ஷமியை தேடி வருகின்றனர்.