உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த நாளி்ல்தான் அந்த பெருந்துயர் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அன்று மதியம் 3.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு கார் வேகமாக வந்து, துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
அந்தக் காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்தது. இதனால், அந்தக் கார் மோதிய பேருந்து வெடித்துச் சிதறியது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது பொறுப்பேற்றது.
இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று அங்கு செயல்பட்டுக்கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதன்மூலம், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவை மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார். அவரது எக்ஸ் தளத்தில், “2019 ஆம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை நம் உணர்வில் என்றென்றும் பதிந்திருக்கும். ஒவ்வொரு இந்தியனும் அவர்களின் துணிச்சலை கண்டு உத்வேகம் பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் ஆண்டு நிறைவையொட்டி ஜம்மு-காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கியமான பகுதிகளில் இந்தியா பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதை அதிகரித்தது. தாக்குதலின் 7வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை வெள்ளிக்கிழமை முதல் ஸ்ரீநகரின் பரபரப்பான பகுதிகளிலும் பிற இடங்களிலும் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
