பாகிஸ்தானோட பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் எல்லைக் கோடு அருகே கண்மூடித் தனமான தாக்குதலை பாகிஸ்தான் இந்திய பொதுமக்கள் மீது நடத்தி வருகிறது. டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்களை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராணுவத்திற்கு துணையாக நாங்கள் இருக்கிறோம் என சண்டிகரில் ஏராளமான இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். பகுதி நேர தன்னார்வலர்களை உறுப்பினர்களாக கொண்ட ராணுவ ரிசர்வ் படையாக, “டெரிடோரியல் ஆர்மி” என்ற பெயரில் பிராந்திய ராணுவம் அங்கு செயல்படுகிறது. இந்த பிராந்திய ராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முழு அதிகாரம் ராணுவ தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சண்டிகரில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். ’ராணுவத்திற்கு உதவ தயார்’ என முழக்கமிட்டப் படி சண்டிகரில், இளைஞர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் காலை 6 மணி முதல் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.