ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில் வாழ்ந்த மகான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தார். இந்தநிலையில், அவரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (நவ. 19) புட்டபர்த்தி வந்தார். ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்கு சென்ற பிரதமர் மோடி, பிரார்த்தனை செய்தார்.
இதையடுத்து, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனை மற்றும் அவரது சிறப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, சத்ய சாய்பாபா நம்முடன் இல்லையென்றாலும், அவரின் போதனைகள் மற்றும் அன்பு, சேவை மனப்பான்மை ஆகியவை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துவதாக குறிப்பிட்டார். சாய்பாபாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தும் பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பதாகவும், புட்டபர்த்தியின் புனித பூமியில் இருப்பது ஒரு சிறந்த ஆன்மிக அனுபவம் என்றார். ஸ்ரீ சத்ய சாய் பாபாவை கவுரவிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட்டது அரசிற்கு கிடைத்த ஒரு மரியாதை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
விழாவில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, மாநில அமைச்சர்கள், கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
