சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தற்போது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ,அப்போது மத்திய அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணம்” என முழக்கமிட்டனர். மேலும் பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது, இதன் விளைவாகச் சாதாரண மக்கள் இன்று பட்டினியால் வாடுகின்றனர்” என்று கார்கே சாடினார்.
ராகுல் காந்தி ஏற்கனவே குறிப்பிட்டது போல, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிலைப்பாடுகளுக்கு இணங்கச் செயல்படுவதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் இந்தியா முன்கூட்டியே மாற்றுத் திட்டங்களைத் தீட்டாதது ஒரு மிகப்பெரிய ‘கட்டமைப்புத் தவறு’ என குற்றம்சாட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முக்கிய நகரங்களில் எரிவாயு விநியோக மையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டு, தினக்கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

