தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை இன்று சென்னையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக அதிரடியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் இல்லத்தரசிகளைக் கவரும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா ‘பிரிட்ஜ்’ (குளிர்சாதனப் பெட்டி), ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், மற்றும் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த குடும்பங்களுக்கு ஒருமுறை நிதியாக 10,000 ரூபாய், மாணவர்களின் கல்வி கடன் ரத்து, மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீட்டை 10.5 சதவீதமாக உயர்த்துதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் இன்று வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, தனது தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு சிறப்புச் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது தேர்தல் பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக, அதிமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தனது பிரச்சாரப் பயணத்தை ஆன்மீகத் தலமான இங்கிருந்து தொடங்குவதை அவர் ஒரு சென்டிமென்ட் வாய்ப்பாகக் கருதுகிறார். கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல்,  அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version