கேரளாவில் கொச்சி துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த லைபீரியா நாட்டைச் சேர்ந்த கண்டெய்னர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது.
விழிஞ்ஞத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த சரக்குக் கப்பல், கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் சுமார் 38 மைல் தொலைவில் வந்தபோது திடீரென ஒருபக்கம் சாய்ந்து மூழ்கத் தொடங்கியது.
உடனடியாக கப்பல் நிர்வாகம் உதவி கோரியதை அடுத்து, இந்திய கடலோர காவல்படை மீட்புப் பணிக்காக இரண்டு கப்பல்களையும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரையும் விரைந்து அனுப்பியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனிடையே, கப்பலில் இருந்து கசிந்த ரசாயனப் பொருட்கள் காரணமாக அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், கரை ஒதுங்கியுள்ள எந்தப் பொருட்களையும் பொதுமக்கள் தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.