உத்தரப்பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில்உள்ள ஒரு பிரபலமான தாபாவில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு உணவின் தரம் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

காஜிப்பூர்-வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள மாவட்டத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான தாபாக்களில் ஒன்றான சாம்ராட் தாபாவில் சிலர் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் தங்கள் உணவோடு தயிரையும் ஆர்டர் செய்தனர். இந்த தயிரின் நடுவில் ஒரு இறந்த எலி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் உடனடியாக தாபா ஊழியர்களிடம் புகார் அளித்து, இந்த மிகப்பெரிய அலட்சியத்தைக் கண்டித்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தயிர் தட்டில் இறந்த எலி இருந்ததை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய அந்த வீடியோவில், உணவகத்தை நடத்துபவர் ஊழியர்களிடம் அந்தச் சம்பவம் குறித்து கண்டிப்பதைக் காணலாம். இந்த வீடியோ வைரலாகி புகார்கள் வந்ததை அடுத்து, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FSDA) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அழுக்கு மற்றும் அலட்சியத்திற்கான ஏராளமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. அதன் பிறகு, நிர்வாகம் உடனடியாக தாபாவிற்கு சீல் வைத்தது. தாபாவிலிருந்து உணவு மற்றும் பானங்களின் மாதிரிகளையும் அதிகாரிகள் சேகரித்து, சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
சோதனை அறிக்கை வந்தபிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வின்போது பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகவும், இது அந்த உணவகத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கண்டறியப்பட்ட விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டு, தேவையான உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளை இந்த உணவகம் பூர்த்தி செய்யும்வரை தாபா மூடப்பட்டே இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காசிபூரின் உணவுத் துறையின் இணை இயக்குநரும், உணவுப் பாதுகாப்புத் துறையின் துணை ஆணையருமான ரமேஷ் சந்திர பாண்டே கூறியதாவது, வைரலான வீடியோவும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட விதிமீறல்களும் ஒத்துப்போனதால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். “உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என்றும், விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “பிரபலமான உணவகங்களின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்தால், சிறிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாது” என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். “பயணிகளின் பாதுகாப்பிற்காக நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களையும் நிர்வாகம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று சில நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version