டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்புவில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4 ஆயிரம் கோடி)  நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  தெரிவித்தார். இதில் 350 மில்லியன் டாலர் சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும் என்றார்.

புயலால் பாதிக்கப்பட்ட சாலை, ரயில் மற்றும் சேதமடைந்த பாலங்களை சரி செய்யவும் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் நிதியுதவி பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், இயற்கை பேரிடர் புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி தங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்கக் கடலில் அண்மையில் உருவாக டிட்வா புயல் இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டிய இந்தியா, மீட்பு படையினர் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version