நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
தங்க நகைகள் மீதான கடன்களை வழங்கும் விதிகளில் ரிசர்வ வங்கி அண்மையில் மாற்றம் செய்தது. அதில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைகள் பெரிதும் பாதிப்பதாக நடுத்தர தரப்பு மக்கள் எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர்.
தங்க நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், நகைக்கடன் நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளை தொடர்ந்து, நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ரூ.2 லட்சத்துக்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய கட்டமாக, சிறு தங்க நகை கடன் பெறுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.
புதிய விதிகளை அமல்படுத்த சிறிது அவகாசம் வழங்கி 2026 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்து உள்ளது.