பாகிஸ்தானின் அத்துமீறலான தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாடே இப்படி பதட்டத்தில் சென்று கொண்டிருக்க, பாலிவுட் திரையுலகம் மட்டும் இந்த போரை தழுவி படம் எடுக்கவும், அபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கும் போட்டி போட்டு திரை சங்கங்களுக்கு விண்ணப்பம் அளித்து வருகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் ஆபரேஷன் சிந்தூர், மிஷன் சிந்தூர், சிந்தூர் : தி ரிவெஞ்ச் என பல தலைப்புகளை பதிவு செய்வதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில், மேற்கிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இயக்குநர் உத்தம் மகேஷ்வரி என்பவர் தனது சமூகவலைதளத்தில் ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்றை எடுக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தை ”நிக்கி விக்கி பாக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கண்டெண்ட் எஞ்ஜினியர்” ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போர்க்களத்தில் ஒரு பெண் ராணுவ அதிகாரி நெற்றியில் குங்குமம் இடுவது போலவும், போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் இருக்கும் படியான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலைதளத்தில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டது. இப்படிப்பட்ட பதற்றமான சூழலில் இத்தகைய திரைப்படம் தேவையற்றது என்றும் சிலர் கூறினர். இதனால் கலக்கமடைந்த இயக்குநர் உத்தம் மகேஷ்வரி, மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், ”ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியிட்ட திரைப்பட அறிவிப்பு குறித்து மனிப்பு கேட்பதாகவும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல” எனவும் தெரிவித்துள்ளார். ”ஒரு இயக்குநராக நமது ராணுவ வீரர்களின் தைரியம், தியாகம், வலிமையால் நெகிழ்ச்சியடைந்து, அதனை திரைக்கு கொண்டுவர விரும்பியதாகவும், இந்த யோசனை தேசத்தின் மீதான் ஆழ்ந்த் மரியாதை மற்றும் அன்பில் இருந்து பிறந்தது, புகழ் மற்றும் பணத்திற்காக அல்ல” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
”திரைப்படத்தை அறிவித்த நேரம் சிலருக்கு அசவுகரியத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தியிருந்தால், அதற்காக மிகவும் வருந்துவதாகவும், எல்லையில் போராடும் வீரர்கள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தினருக்காக அன்பும், பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும்” எனவும் பதிவிட்டுள்ளார்.