சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு, மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் நேற்று பூமிக்குத் திரும்பினர்.
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் இந்த நான்கு விண்வெளி வீரர்களும் கடந்த மாதம் 25-ம் தேதி, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டனர். 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, ஜூலை 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன் விண்கலம், அங்கு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த காலத்தில், அவர்கள் 60 ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகளும் அடங்கும்.
நேற்று மாலை 4:45 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பிய இவர்கள், சுமார் 22 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, இன்று (ஜூலை 15, 2025) மதியம் 2:55 மணிக்கு வளிமண்டலப் பகுதிக்குள் நுழைந்தனர். இந்திய நேரப்படி பகல் 3:01 மணியளவில், டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இது இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். விண்கலம் தரையிறங்கியதும், ஸ்பேஸ்எக்ஸின் மீட்புப் படையினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர். நாசா, இஸ்ரோ விஞ்ஞானிகள், சுக்லாவின் இந்தப் பயணம் இஸ்ரோவின் ககன்யான் திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். நான்கு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.