சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் சன்னிதானம் அமைந்திருக்கூடிய பகுதியில் 1998ம் ஆண்டு சன்னிதானம் மேற்கூரை மற்றும் வாசப்படி, துவார பாலகர் சிலை உள்ளிட்ட இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த 2019ல் கருவறைக்கு முன்பாக உள்ள துவாரபாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் பராமரிப்பு பணிக்காக அகற்றப்பட்டன. தங்க முலாம் பூசிய பிறகு, மீண்டும் தங்க தகடுகள் அணிவிக்கப்பட்ட போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்தில் தேவசம்போர்டு மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தங்க தகடுகள் பதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குற்றம்சாட்டப்பட்டுள்ள முராரி பாபு மற்றும் வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தினம்திட்டா மாவட்ட குழு உறுப்பினருமான பத்மகுமார் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் இந்த மாத தொடக்கத்தில் 2 முறை ஆஜரானார். இந்தநிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு பத்மகுமாரிடம் இன்று விசாரித்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டார். சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் எட்டாவது குற்றவாளியாக பத்மகுமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version