4 நாட்கள் பயணமாக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு பிரிட்டனில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. 2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி வரும் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான் கலந்து கொள்கிறார். அதேபோல, இந்தியா ஏ.ஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 கண்காட்சியும் இன்று தொடங்குகிறது.
இந்தநிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். மும்பையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் இந்திய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
இவரது வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரான்ஸ் தற்போது இந்தியாவின் 2வது பெரிய பாதுகாப்பு சப்ளையராக உள்ளது. அதன்படி, அவரது இப்பயணத்தில் HAMMER ஏவுகணைகளின் திட்டத்தின்கீழ் 144 ரஃபேல் போர் விமானங்களுக்கான முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
